Thursday, December 17, 2009

கோலங்கள்



சில்லென்று மனம் குளிர
பனித்துளிகளில் துளிர்த்தது
புள்ளி கோலம்




இலைகளின் ஊடே
வெயில் போட்டது
கோட்டு கோலம்




பூக்கள் மலர்ந்து
மணத்தோடு தந்தது
வண்ணக் கோலம்




வானிலை மாற
மழை இட்டது
இழை கோலம்




மழைத்துளியின் தொடலில்
நீர் வரைந்தது
நெளி கோலம




எதுவும் ஈடாகவில்லை
குழந்தையின் அசைவுகள்
தீட்டிய கோலத்தின் முன்...



<படங்கள் இணையம்>

Wednesday, December 16, 2009

நண்டு வருது, நரி வருது...

குழந்தை பிறந்து வளரும் வரை ஒவ்வொரு வட்டாரத்திலும் சில பாடல்கள் உண்டு. கேட்க, பாட இனிமையான பாடல்கள் அவை. நான் கேட்ட சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன். சில பாடல்கள் மருவி இருக்கலாம். தவறு இருந்தால் திருத்துங்கள். உங்களுக்குத் தெரிந்ததும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*********************
பெயர் வைக்கும்பொழுது முறத்தில் (சொளவு என்பது வழக்கு) சேலை, வேஷ்டி வைத்து, குழந்தையைக் கிடத்தி இலேசாகப் புடைப்பார்கள். அப்பொழுது பாடும் பாடல்

சொளவு நிறையத் தந்தவரே
உலகு நிறைய தா!!!
(இதை உழவு நிறைய என்றும் சொல்கிறார்கள். எது என்று எனக்குத் தெரியவில்லை)

************************
சின்னக் குழந்தையில் இருந்து அதன் இரு கைகளை நாடியில் குவித்து, பின்பு விரிக்கும் இவ்விளையாட்டிற்குப் பாடல்

சொட்டை , சொடக்கு
சோத்துப்பானை டொமக்கு...

ஒவ்வொரு சொல்லுக்கும் நாடியில் கையைக் குவித்து வைக்க வேண்டும். "டொமக்கு" என்று உரக்கக் கூறிக் கையை நாடியிலிருந்து எடுத்து விரிக்கும் பொழுது குழந்தை சிரிக்கும்.
************************

கைகளைப் பூவாகப் பாவித்து விரித்து, கையை ஆட்டிப் பாட, பின் நம்மோடு சேர்ந்து குழந்தையும் பூ போல் கையை விரித்து சிரிக்கும்

மாம்பூ மகிழம்பூ
மாமா கொடுத்த
மல்லிகைப்பூ

தாம்பூ தாழம்பூ
தாத்தா கொடுத்த
தாமரைப்பூ

***************************

பேச்சு சொல்லிக் கொடுக்கையில்

முதலில் அஃகு, அங்கு...

பின் அத்தை என்று சொல்லிக் கொடுக்க...இடது கையை விரித்து வலது கை ஆட்காடி விரலால் இடது கையின் நடுவில் குத்தி குத்தி...

அத்தத்த நெய்யூத்து
பிஞ்சு கத்தரிக்காயாம்
இன்னும் கொஞ்சம் ஊத்து

**********************

கொஞ்சம் வளர்ந்த பின், கையைப் பிடிக்க சொல்லும் பாட்டு:

மாக்கொழுக்கட்டை
மஞ்சள் கொழுக்கட்டை
மாமியார் பிடித்த
மண் கொழுக்கட்டை
பிள்ளையார் பிடித்த
பிடி கொழுக்கட்டை

இதில், நம் கைவிரல்களை மடக்கி ஒவ்வொரு வரிக்கும் குழந்தையின் கைகளில் வைக்க வேண்டும். கடைசி வரிக்கு நம் கையைப் பிடிக்கச் சொல்லிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

***************************

மேலும் சில பாடல்கள்:
---------------------

பருப்பு கடை, பருப்பு கடை
இது சோறு, இது குழம்பு, இது கீரை, இது தயிர், இது பொரியல்
அம்மாக்கு கொஞ்சம், அப்பாக்கு கொஞ்சம்,
பாட்டிக்கு கொஞ்சம், தாத்தாக்கு கொஞ்சம்,
பாப்பாக்கு கொஞ்சம்

கழுவி கழுவி ஊத்து...
நண்டு வருது, நரி வருது...
நண்டு வருது, நரி வருது...
(கிச்சு கிச்சு மூட்டுதல்)


இந்த பாட்டுக்கு கற்பனை சேர்த்துட்டு சாய்ந்தாட வேண்டியதுதான்...
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
மணிவிளக்கே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு


கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய் போடலாம் கைவீசு

எத்தனை அழகான பாடல்கள்? குழந்தைகளும் இரசிக்க நாமும் இரசிக்க வாழ்க்கையை சுவாரசியமாக்கும் அழகான பாடல்கள்.

Wednesday, December 9, 2009

மொறு மொறு தோசை

மொறு மொறு தோசை பிடிக்காத குழந்தைகள் இருப்பரா என்று எனக்கு தோன்றியது நேற்று மொறு மொறு தோசை சுட்டு சுட்டு கை வலித்த பொழுது. (தோசை பிடித்தவர்கள் எல்லாம் குழந்தைகள் மாதிரியா என்று யாரும் கேள்வி கேட்கக்கூடாது). இரண்டு நிமிடத்தில் என்று விளம்பரப்படுத்தப்படுபவை எல்லாம் இந்த தோசைக்கு முன் நிற்காது.

உண்மையில் இட்லி தோசை கண்டுபிடித்தவர்களுக்கு மொறுமொறு என்று தோசை, மல்லிகைப் பூவாக இட்லி கொடுத்து வாழ்த்தவேண்டும். பெரும்பான்மையான பரபர குடும்பங்களின் சாப்பாடு இந்த இட்லி தோசை மாவில் தான் ஓடும். “அரிசி மாவு உளுந்து மாவு கலந்து சுட்ட தோசை” என்று சிம்பிளாக சொன்னாலும் அவ்வளவு எளிதல்ல மாவரைப்பது... க்ரைண்டரே அரைத்தாலும்...

என் சிறுவயதில் உளுந்தை ஊற வைத்து அதை களைந்து (ஒரு தோல் இல்லாமல் உளுந்து கழுவறத பார்க்கறதிலேயே பொழுது போயிடும்), அப்புறம் உரல்ல போட்டு ஆட்டுவாங்க. நான் பக்கத்தில் உட்கார்ந்து மாவைத் தள்ளி தள்ளி விடுவேன். இப்ப அப்படி இல்லை, உளுந்து ஒரு அரை மணிக்கு ஊற வச்சு க்ரைண்டர்ல போட்டு எடுத்தடலாம். தள்ளறதைத் தள்ளி தான் ஆகணும். "பட்டனை தட்டினா ரெண்டு இட்லியும்..." அப்படீனு வந்தாலும் யாராவது மாவை அரைக்கத்தானே வேணும்?

முதலில் உளுந்து அரிசி விகிதம் ஒன்றுக்கு மூன்றா நான்கா என்று தொடங்கி , உளுந்து பொங்க வேண்டும் (பாக்கெட் வாங்காதே, மளிகைகடையில் மூட்டையிலிருந்து வாங்கு என்ற அறிவுரையுடன் சில சமயம் இந்த டிப்ஸ் கேட்டதற்காக ஊரில் இருந்து உளுந்து சுமந்து வர வேண்டி இருக்கும்), முழு உளுந்து , சாப்பாட்டு அரிசி என்றால் இட்லி மென்மையாக இருக்கும் என்று அறிவுரைகளைப் பின்பற்றி, மாவைப் பதமா கரைக்காட்டி இட்லி வராது என்று பக்குவமாகக் கலக்கி உப்பு போட்டு புளிக்க வைத்தால், “ஒரு சில கைக்கு மாவு பொங்காது” என்ற கமெண்ட்டுக்கு மனம் பொங்கும். ஆனால் ஒரு வழியாக இந்த டெக்னிக் எல்லாம் கற்று மாவு ஆட்டி வைத்து விட்டால் டிபனுக்கு யோசிக்க வேண்டாம். இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று ஊற்றிக் கொண்டே இருக்கலாம் மாவு தீரும் வரை. தீரப்போகிற சமயத்தில் கூட ரவை, கோதுமை எல்லாம் சேர்த்து இரவா தோசை, கோதுமை தோசை என்று அவசரத்துக்கு கை கொடுக்கும் இட்லி தோசை மாவே மாவு. திடீர் விருந்தினர் வந்தாலும் கவலை இல்லை தோசை மாவு இருந்தால்...

இந்த தோசையில் தான் எவ்வளவு வெரைட்டி... புள்ளைங்களுக்கு அப்படியே கண்ணாடி மாதிரி தோசை சுட்டுக் கொடுத்தால், ஊத்தற கை வலிக்கும் வரை உள்ளே போய்கிட்டே இருக்கும். சில பெரியவங்க... இப்படி சாப்பிட்டால் உடம்புல ஒட்டுமா என்று சும்மா கிண்ணுனு சுடுவாங்க பாருங்க... ஒண்ணு சாப்பிட்டால் ஒரு நாளை ஓட்டிடலாம் ... என்ன ஒரு புள்ளையும் தொட்டு கூட பார்க்காது. இன்னும் சிலரு ஓலையாவும் இல்லாமல், ஊத்தப்பமாவும் இல்லாமல், மாவு ஊத்தி சுடறதெல்லாம் தோசை தான்னு கொடுப்பாங்க...ஏதோ ஒண்ணு வயத்துக்கு கிடைச்சா சரிதான்.

இந்த இட்லி ... அரைச்ச மாவுல மொத நாள் இட்லி நல்லா வரும். அதுக்கப்புறம் அது தோசைக்கு தான் நல்லா இருக்கும். ஆனா எல்லாருக்குமே மல்லிப்பூ மாதிரி வந்துடாது... கொஞ்சமா கல்லு மாதிரி... அட!! கல்லை சாப்பிட்டாலும் செரிக்கற மாதிரி உடம்பு வேண்டாமா? அப்புறம் குஷ்பூ இட்லியாமே ... மல்லிப்பூ தோத்தது போங்க... மாவரைக்கும் பொழுது ஆமணக்கு கொஞ்சம் சேர்க்கணுமாம் ஒருத்தர் டிப்ஸ் கொடுத்தார்... நாங்க கல்லையே செரிச்சுக்கறோம்னு சொல்லிட்டாங்க கேட்டவுக...

இது போக மாவுக்கு போடற உளுந்தையே வறுத்து, அது கூட உப்பு மிளகாய் சேர்த்து அரைச்சு நல்லெண்ணைய் ஊத்தி அப்படியே இன்ஸ்டண்டா தொட்டுக்க இட்லிபொடி கண்டுபிடிச்சவங்களை எப்படி பாராட்டறது? அதுல கொஞ்சமா வெல்லம் சேர்த்து திரிச்சிட்டா புள்ளைங்க அப்படியே மொறு மொறு தோசை, தொட்டுக்க இட்லி பொடினு தினமும் சாயங்காலம் ஸ்நாக்ஸா சாப்பிட சலிக்கறதில்லை.

இப்ப இந்த இட்லி தோசையிலயே ஆயிரத்தெட்டு வெரைட்டி பண்ணலாம்; சாப்பிட யாராவது ரெடினா... என்ன திடீர்னு இட்லி தோசைனு கேட்டீங்களா? இப்ப புள்ளைங்க வயத்துல சாப்பாடு இறங்க திரும்ப சமையலறையில் ஏ,பி,சி,டி எல்லாம் படிக்க வேண்டி இருக்கே? நல்ல வேளையா இட்லி இன்னும் வட்டமா தான் இருக்கு :-)